நிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு – இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

261 0

வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டது. சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை நீட்டிப்பது தொடர்பான மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை மாஜிஸ்திரேட் முன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிரவ் மோடி ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து நிரவ் மோடியின் காவலை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.