மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மண் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்வதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் இங்கு கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் பட்டிப்பளை பகுதியில் பெருமளவில் சட்ட விரோத மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகள் காரணமாக வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் ஆறுகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.அத்துடன் நீர்பாசனத்துக்குரிய குளங்களில் அதிகளவு மண் அகழ்வு நடைபெறுவதனால் அக்குளங்கள் பாதிக்கப்படுவதுடன் நீர்பாசனத்திணைக்களங்களுக்குரிய வீதிகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம் உரிய பணிகளை மேற்கொள்ளவில்லையெனவும் இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம் மண் அகழ்விற்கான அனுமதியை வழங்குகின்றபோதிலும் அவற்றினை கண்காணிக்க தவறியுள்ளதாகவும் இங்க தெரிவிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,ஆறுகளில் மண் அகழ்வினை மேற்கொள்ளும் பொறுப்பினை நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைக்கும்போது அவர்கள் அதனை அவர்கள் சிறந்த முறையில் செய்யமுடியும் என தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று எழுவான்கரைகளில் உள்ள பிரதேசசபைகள் வருமானம் ஈட்டும் சபைகளாக உள்ள நிலையில் படுவான்கரை பகுதிகளில் உள்ள பிரதேசசபைகள் மிகவும் குறைந்த வருமானமே ஈட்டுவதாகவும் அதன்காரணமாக மண் விற்பனை உரிமையினை பிரதேசசபைகளுக்கு வழங்கும்போது அது அந்த சபைக்கு வருமானம் ஈட்டும் ஒரு துறையாக இருக்கும் என தெரிவித்தார்.இது தொடர்பில் புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகம்,நீர்பாசன திணைக்களம்,உள்ளுராட்சி ஆணையாளர்,பிரதேசசபையின் செயலாளர்களை அழைத்து ஆராய்ந்து இந்த நடைமுறைகள் தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றுவோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.