நாமல்க்கு பிணை

414 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் மஞ்சுல கருணாரத்ன இன்று இந்த பிணை அனுமதியை அளித்தார்.

இதன்படி, இவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வீதம் 3 சரீர பிணைகளில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில், நாமல் ராஜபக்ஸ உள்ளிட்;ட 8 பேர் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஸ உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி வி ஷானக மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர் சம்பத் அத்துகோரள ஆகியோரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார மற்றும் தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் இணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி, வாக்கு மூலம் வழங்க, ஹம்பாந்தோட்டை காவல்துறை தலைமையகத்திற்கு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டனர்.

மத்தல வானூர்தி நிலையத்தை நீண்டகாலம் குத்தகை அடிப்படையில்  இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் கடந்த 6ஆம் திகதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment