மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையேற்று நடாத்தினர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜாக்கொட ஆராய்ச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்.பிரதேச செயலாளர்கள்,கல்விப்பணிப்பாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
சிறுவர்கள்,மாணவர்கள் போதைப்பொருள் பாவனை அதிகரித்துசெல்லுவது தொடர்பில் சமூக குற்றங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துச்செல்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுப்பதற்காக பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் அத்துமீறிய குடியேற்ற செயற்பாடுகள்,சட்ட விரோத மண் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கையினை ஏடுப்பதற்கு குழுக்களும் இதன்போது அமைக்கப்பட்டது.