மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் – மயில்வத்தை பிரிவில், இடம்பெற்ற மினி சூறாவளியால், 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சூறாவளியினால் 5 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளது.
அத்துடன், மின் கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப் பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேசவாசிகள் மற்றும் கிராம சேவகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலையக பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடும் காற்று தொடர்ந்து வீசி வருவதால், பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.