எதிரிநாடான வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்காலத்துக்கு இணயான பதற்றம் உருவாகியுள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் ஆண்டுதோறும் நடத்தும் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தென்கொரியா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை மிரட்டலும் விடுத்திருந்தது.
வடகொரியாவின் இறையாண்மையை மீறும் வகையிலும் எங்கள் படைகளை ஆத்திரமூட்டும் முறையிலும் எங்கள் நாட்டை ஒட்டிய கடல் எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டால், இந்த பயிற்சியில் ஈடுபடும் அனைவரையும் சாம்பலாக்கி விடுவோம் என வடகொரியா நாட்டின் ராணுவ தலைமையகம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டுப்போர் பயிற்சியை தென்கொரியா இன்று தொடங்கியது. தென்கொரியா வீரர்கள் சுமார் 50 ஆயிரம் பேரும், அமெரிக்க வீரர்களில் சுமார் 25 ஆயிரம் பேரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த மாதம் 2-ம் தேதிவரை நடைபெறும் இந்த போர் பயிற்சிக்கு அச்சுறுத்தலாக வடகொரியா ஏதாவது வாலாட்டினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய ராணுவமும், அமெரிக்க படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தென்கொரியா நாட்டின் ராணுவ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதைப் போன்ற ஒரு பதற்றநிலை உருவாகியுள்ளது.