முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ வசமுள்ள விடுவிக்கப்படுவதாக உறுதி வழங்கப்பட்ட பொதுமக்களின் காணிகள், வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தாம் தமது காணிகளை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகுதியாகி விடுவிக்கப்படவேண்டிய தமது காணிகள் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனுடனான சந்திப்பொன்றை குறித்த காணி உரிமையாளர்கள் நேற்றையதினம் ஏற்படுத்தியிருந்தனர். இதன்போதே மக்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக பொதுமக்களுக்கு சொந்தமான குடியிருப்பு காணிகளை இறுதி யுத்தத்தின் பின்னர் 682ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி முதல் தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாயிலை மறித்து கூடாரம் அமைத்து சாத்வீக வழியில் போராடி வந்தனர். இதன் பலனாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பெயரில் குறித்த மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, முதற்கட்டமாக ஒரு தொகுதி காணிகள் அதாவது 7.5ஏக்கர் காணிகளை விடுவதாகவும் மேலும் 10 ஏக்கர் காணிகளை மூன்று மாதத்திலும் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6மாதத்தின் பின்னர் விடுவிப்பதாகவும் இராணுவத்தரப்பால் அரசாங்க அதிபர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடம் எழுத்துமூலம் கடிதம் வழங்கப்பட்டு போராட்டம் முடிவுறுத்தப்பட்டதோடு 7.5 ஏக்கர் காணியும் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்குறுதி வழங்கப்பட்டு இன்றுடன் ஏழரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் படி ஒரு அங்குல காணிகூட விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரிடம் தாம் ஏற்கனவே முறையிட்ட போது அனைத்துக் காணிகளையும் சேர்த்து ஆறுமாத கால அவகாசத்துக்குள் இராணுவம் வழங்கி விடுவார்கள் என தம்மிடம் கூறியதாகவும் இருந்தும் இன்றுடன் 6 மாதமும் முடிந்து 7.5 மாதங்கள் கடந்து விட்டது எனவும் இதனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இனியும் அரச அதிகாரிகளினதும் இராணுவத்தினரதும் பேச்சை நம்பி காத்திருக்கமுடியாது என இராணுவ வசமுள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் எதிர்வரும் 17ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதி மீண்டும்புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.