இலங்கை மற்றும் இந்திய மீனவர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதன் அவசிய குறித்து இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.
நேற்று இந்தி தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் தொடர்பான இணைந்த செயற்குழு மூன்றாவது முறையாக நேற்று கூடி இந்த பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களின் பிரச்சனை தீர்வில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் நீரியல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர் துரிதகதியில் விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தவிர, இரு நாட்டு கடற்தொழிலாளர்களும் பாக்குநீரிணையில் மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகள் உட்பட பலவிடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.