தமிழக வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று(22) காலமானார்.
சிங்கப்பூரின் அதிபராக 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது.
அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர் கமிஷனர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் வகித்துவந்த இவருக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது கடந்த 2012-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட எஸ்.ஆர்.நாதன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று எஸ்.ஆர்.நாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.
மறைந்த எஸ்.ஆர்.நாதனுக்கு இறுதி சடங்குகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வியாழக்கிழமை முதல் வைக்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவால், நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பாதியில் பறக்கவிடப்படும்.