அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது!

469 0

அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக் காரணம்.

தமக்கு எதிரான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தியே அந்த மூன்று அரசியல் கைதிகளும் இந்தப் பேராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். வழமையாகக் கூறப்படுவதுபோல, சாகும் வரையிலான உண்ணாவிரதம் என கூறாமல் தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை வைத்திய அதிகாரி மட்டுமல்லாமல் தங்களை நேரடியாகச் சந்தித்த வடமாகாணசபை உறுப்பினர்களது வேண்டுகோள்களையும் புறந்தள்ளி தமது போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலை மோசமடைகின்றது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் அவர்களுக்கு உறுதியளித்த போதிலும், அவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் நீர்கூட அருந்த மாட்டோம் எனக்கூறி, தமது உணவு ஒறுப்பு போராட்டத்தை அவர்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். அனுராதபுரம் சிறைக் கூடுகளில் மரண தண்டனை பெற்ற கைதிகளோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த அரசியல் கைதிகள் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து அவர்கள் அனுராதபுரம் அரச பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அங்கேயும் அவர்கள் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை. உறுதியாகத் தொடர்கின்றார்கள்.

ஜனாதிபதிக்கு அழுத்தம்

அவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமாகாணம் முழுதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய தமிழ்த்தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த விஜயத்தையொட்டி இந்த கடையடைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சிறைச்சாலைகளில் நீதிவிசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே, இந்தக் கடையடைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்ற ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய உத்தரவாதம் அளிக்காவிட்டால், அவருடைய யாழ் விஜயத்திற்குப் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கடையடைப்புக்கான ஏற்பாட்டில் பங்கெடுத்துள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது நீண்டகாலமாகவே தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீர்த்துப் போகாமல் எரிமலையை ஒத்ததாக, கொதி நிலையில், அது கொதித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வப்போது அதனை அணைப்பதற்காக அல்லது நீர்த்துப் போகச் செய்வதற்காக அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற வாக்குறுதிகளும், போலியான நடவடிக்கைகளும் அதனை உயிர்த்திருப்பதற்கே வழிகோலியிருக்கின்றது.

உரிமைப் போராட்டமல்ல…. அது பயங்கரவாதம்

தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 60 வருடங்களாகப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. முப்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் உரிய முறையில் அரசாங்கங்களினால் கவனத்தில் எடுத்து, தமிழ் மக்களுடைய உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. மாறாக அரச அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் விளைவாக ஆயுதப் பேராட்டம் தலை தூக்கியது. ஆயுதப் போராட்டம் காரணமாகவே முப்பது வருடங்களாக இந்த நாட்டில் ஒரு யுத்தம் மூண்டிருந்தது.

தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்த ஆயுதப் போராட்டம் பல்வேறு மாற்றங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. நியுயோர்க் மாநகரின் உலக வர்த்தக நிலையத் தொடர்மாடிக் கட்டிடத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனமாகிய பென்டகன் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்கைடா அமைப்பினரால் நடத்தப்பட்ட விமானத் தற்கொலைத் தாக்குதலின் போது பேரழிவு ஏற்பட்டிருந்தது. அதில் 3000 பேர் கொல்லப்பட்டனர். ஆறாயிரம் பேர் காயமடைந்தனர். அல்கைடா அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி பல முனைகளிலான இந்தப் பயங்கரவாதப் படுகொலை தாக்குதலை நடத்தியிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது. இதனையடுத்து, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் என இது குறிக்கப்பட்டது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் பாதுகாப்பு நிலையிலான ஒரு போக்கு தலையெடுத்திருந்தது.

இந்த உலகப் போக்கை அல்லது உலகம் கடைப்பிடித்த ஒழுங்கைப் பின்பற்றிய இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப்பலிகளின் செயற்பாடுகளைப் பயங்கரவாத நடவடிக்கைகளாகச் சித்தரித்து, அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என பெயர் சூட்டியது. இதற்கு முன்னதாகவே தமிழ் இளைஞர்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் 1979 ஆம் ஆண்டிலேயே அரசாங்கத்தினால நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது,

அரசியல் உரிமைக்காகப் போராடியவர்களைப் பயங்கரவாதிளாகச் சித்தரித்த அரசாங்கம் அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்றே அடையாளப்படுத்தி வருகின்றது. அரசியல் உரிமைக்கான போராட்டத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டார்கள் என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களைத் தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும், அரசியல் கைதிகள் என குறப்பிடுகின்ற போதிலும், அதனை அரசாங்கமும் இராணுவமும் தொடர்ந்து மறுதலித்து வருகின்றன.

அந்த வகையிலேயே நீதி அமைச்சராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள தலதா அத்துக்கோரளையும் அரசியல் கைதிகள் என நாட்டில் எவரும் கிடையாது. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக சிறைச்சாலைகளில் பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டிருக்கின்றார்.

யுத்தம் முடிந்தது – பயங்கரவாதம்…..?

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவற்றை எள்ளி நகையாடின. போலியான பேச்சுவார்த்தைகளை நடத்தி கிழித்தெறிவதற்காக அல்லது கிடப்பில் போடப்படுவதற்காகவே ஒப்பந்தங்களைச் செய்தன. அதனால் தீவிரம் பெற்ற போராட்டங்களை அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்து வன்முறையின் மூலம் அடக்கி ஒடுக்கின. இதனால் தனிநாட்டுக்கான போராட்டம் வெடித்தது. போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காகவும், அரச பயங்கரவாதத்தில் இருந்து போராட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஆயுதப் போராட்டம் பயன்படுத்தப்பட்டது,

நாட்டு மக்களில் ஒரு பகுதியினராகிய தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களுடைய போராட்டத்தைப் பயங்கரவாதமாகவும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அல்லது ஆதரித்தார்கள் என்ற காரணத்திற்காக, அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் சீரான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் கைதிகள் விவகாரம் எரியும் பிரச்சினையாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை என்ன செய்வது எவ்வாறு தண்டிப்பது என்பது தொடர்பில் அரச தரப்பில் திடமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கத்திடம் பயங்கரவாதம் தொடர்பாக தேசிய அளவிலான கொள்கை இல்லாமையே தமிழ் அரசியல் கைதிகள் அடிக்கடி போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆட்சிக் காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது, யுத்தம் முடிவடைந்ததையடுத்து நாட்டில் நிலவிய பயங்கரவாதமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்று அரசாங்கமே உறுதியாகக் கூறுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி நிலவுகின்றது. மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் எட்டு வருடங்கள் கழிந்த பின்னும், பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விடயம் விவகாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

முரண்பாடான நிலைப்பாடு

அவர்களை அரசியல் கைதிகள் என ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. அப்படியானால், அரசாங்கம் கூறுவதைப் போன்று பயங்கரவாதிகள் என சந்தேக்ததில் கைது செய்யப்பட்டவர்களை அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் சரியான பதில் கிடையாது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அந்த சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்ற வழக்குகளில் சந்தேக நபர்களுடைய வாக்குமூலங்களே, ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில், அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்கான முழுமையான ஆதாரமாக நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றே பயங்கரவாதச் செயற்பாட்டில் ஒருவர் ஈடுபட்டார் என்பதற்குரிய போதுமான ஆதாரமாகக் கருதப்படுகின்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளை, உள்நோக்கம் காரணமாகவே அரசாங்கம் பல வருடங்களாக இன்னும் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருக்கின்றது என்று கருத வேண்டியிருக்கின்றது.

இந்த நாட்டை முப்பது வருடங்களாக ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படுகின்ற தாமதமும், இழுத்தடிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் நேர்மை, அரசியல் நிர்வாக நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

பயங்கரவாதத்தில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் அரசாங்கமும் அரச நீதித்துறையும், இராணுவ புலனாய்வு பிரிவினை உள்ளடக்கிய இராணுவமும் கையாண்டு வருகின்ற முறைமை வேடிக்கையானதாக இருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதுகாப்பு அளிக்கப்படும்; பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் ஒலிபெருக்கி அறிவித்தல்கள் மூலமான பகிரங்க உத்தரவாதத்தை ஏற்று சரணடைந்தவர்களும்; காட்டிக்கொடுக்கப்பட்டும்; புலனாய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலான மற்றும் ஒரு தொகுதியினர் என்ன ஆனார்கள், அவர்களை இராணுவம் என்ன செய்தது என்பது இன்னும் மர்மமாக இருக்கின்றது. இராணுவத்தினரால் இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற போர்க்குற்றச்சாட்டு படையினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது என்பது பிறிதொரு விவகாரமான விடயமாகும்.

ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவினார்கள் அல்லது மறைமுகமாகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்யவோ துரித சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவோ விருப்பமில்லாத ஒரு போக்கையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இது பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற இரட்டை நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பயங்கரவாதம் என்ற விடயத்தை சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை திட்டமிட்ட வகையில் பழிவாங்குவதற்காகப் பயன்படுத்துகின்ற ஓர் அரசியல் மூர்க்கத்தனத்தையும் அடையாளம் காண முடிகின்றது.

பயங்கரவாதம் குறித்து தெளிவான தேசிய கொள்கை ஒன்று இருக்குமேயானால், அரசியல் கைதிகள் – அரசாங்கத்தினால் குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாதச் சந்தேக நபர்கள் அல்லது பயங்கரவாதிகள் – சிறைச்சாலைகளில் இருக்கமாட்டார்கள்.

சட்ட ரீதியாக முதன்மை பெறுவது எது?

பயங்கரவாதத்தை மோசமான குற்றச்செயலாகக் கருதுகின்ற அரசாங்கம், அந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளிலும் முரண்பாடான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது,

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் என்ற மூன்று அரசியல் கைதிகளும் எட்டு வருடங்களாகச் சிறையில் வாடுகின்றார்கள். இவர்களுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அங்கு நான்கு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன.

இந்த நிலையில் அரச படையினரைக் கொலை செய்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்தக் கைதிகளுக்கு எதிரான வழக்குகளில் சாட்சியமளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அச்சுறுத்தல் காரணமாக அந்த சாட்சிகள் வவுனியா நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு வரமுடியாதுள்ளது. எனவே சாட்சிகளின் பாதுகாப்பையும் அவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு, இந்த அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என முன்வைக்ககப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, சட்டமா அதிபரினால், அந்த வழக்குகள் அனுராதரபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு இந்த வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கான விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உடனேயே, அதற்கு இந்த அரசியல் கைதிகள் மூவரும் ஆட்சேபணையும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். ஆனால் அவற்றை சட்டமா அதிபர் கவனத்திற் கொள்ளவில்லை. அனுராதபுரத்திற்கு வழக்கு விசாரணைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் 2017 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் தமது வேண்டுகோளை வலியுறுத்தி இந்தக் கைதிகள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் போராட்டம் வழக்குகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னரும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது,

பொதுவாக வழக்கு ஒன்றின் அனுகூலங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் எதிரிகளாகக் குறிக்கப்படுபவர்களுக்கே சேர வேண்டும் என்பது நீதித்துறையின் நடைமுறையாகும். அதேவேளை அந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்களுடைய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியது நீதின்றத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும். அனுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இந்த நீதி நடைமுறை கைநழுவ விடப்பட்டிருக்கின்றது.

எதிரிகளிலும் பார்க்க, சாட்சிகளின் நலன்களிலேயே சட்டா அதிபர் கவனத்தைக் குவித்திருக்கின்றார். வவுனியா நீதிமன்றத்திற்கு வருகை தருவதில் ஆபத்துக்கள் இருக்குயோனல், அதற்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தினதும், சட்டமா அதிபரினதும் கடமையாகும். அந்தக் கடமை இங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவே சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியிருக்கினறார்கள்.

சட்டமா அதிபரின் மறுப்பு

இந்த வழக்குகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சுக்கு ஜனாதிபதியின் செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதன்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் தமிழருக்கு ஒரு நீதியும் சிங்களவருக்கு ஒரு நீதியுமாக மிகுந்த பாரபட்சத்துடன் சட்டமா அதிபர் நடந்து கொள்கின்றார் என்று கடிந்துள்ள சிவசக்தி ஆனந்தன், தமிழர்களின் ஆதரவில் ஆட்சி பீடமேறியுள்ள நல்லாட்சி அரசாங்கமும் இதனைக் கண்டும் காணாத வகையில் நடந்து கொள்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுக்கள் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சட்ட ரீதியாக இந்த வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்திற்கு மாற்ற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதனை அவர் ஏற்கவில்லை. அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகள் அங்கேயே விசாரணை செய்யப்படும். வவுனியாவுக்கு மீண்டும் மாற்றப்படமாட்டாது என உறுதியாகக் கூறிவிட்டார்.

இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களை எதிரிகளாகக் கொண்ட வழக்குகள் திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து அனுராதபுரம், கொழும்பு உட்பட சிங்களப் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட வழக்குகளை, அனுராபுரம், பொலன்னறுவை, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் சட்டமா அதிபரினால் அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கிய பாலியல் கொலை வழக்குகளில் ஒன்றாகிய கிரிசாந்தி கொலை வழக்கு எதிரிகளின் பாதுகாப்பு நலன்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த தமிழர்களான சாட்சிகள் மிகுந்த உயிரச்சத்துடனேயே கொழும்பில் சென்று சாட்சியமளித்தார்கள். அவர்களுடைய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்திய நீதிமன்றம் அவர்களுக்கு உரிய வசதிகளை கொழும்பில் செய்திருந்தது என்பதை இங்கு நினைவுபடுத்துவது அவசியம்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த கிரிசாந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்காகவே கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால், இந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் சட்டமா அதிபர் நேர்முரணான நடவடிக்கை எடுத்திருப்பதையே காண முடிகின்றது.

நீதித்துறையில் நிலவுகின்ற இப்படியான முரண்பாடான போக்கும் தமிழர்கள் மீது அவ்வப்போது காட்டப்படுகின்ற பாரபட்சமான நிலைமைகளுமே இந்த நாட்டின் நீதித்துறையின் மீது அவர்கள் நம்பிக்கை இழக்கச் செய்திருக்கின்றது, நீதித்துறையின் இந்த முரண்பாடான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அனுராதபுரத்தில் 3 தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வடபகுதியில் கடையடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நீதித்துறையின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நீதி கேட்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பி.மாணிக்கவாசகம்

Leave a comment