மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பைனான்சியர் ரூ.40 லட்சம் கொடுத்த தகவல் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக மும்பைக்கு ஆயுதங்களுடன் வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் சரத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 160-க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தவர்.
பயங்கரவாதிகளில் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்பவன் உயிருடன் பிடிபட்டான். கோர்ட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் லக்வியை, விசாரணைக்காக ஒப்படைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்துவிட்டது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு லக்வி உள்ளிட்ட பலரை கைது செய்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சிறையில் இருந்த லக்வி ஓர் ஆண்டுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு பண உதவி செய்ததாக 6 பேரை பாகிஸ்தான் புலனாய்வு துறை (எப்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்தனர். அவர்கள் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் சுபயான் ஜபார் என்ற பைனான்சியர், லஷ்கர் இ தொய்பாவுக்கு ரூ.40 லட்சம் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பாகிஸ்தான் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.
இந்த நிலையில், கைபர்-பக்துங்வா மாகாணத்தில் பதுங்கி இருந்த அவரை கடந்த 3-ந் தேதி பாகிஸ்தான் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரவாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரிடம் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
சுபயான் ஜபாரின் காவல் முடிந்ததை தொடர்ந்து, அவரை லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் புலனாய்வு அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். சுபயான் ஜபாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரை மேலும் சில நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று புலனாய்வு துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, சுபயான் ஜபாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.