குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம்

373 0

201608230730533563_Ennore-Trichy-Madurai-between-through-the-pipeline-cooking_SECVPFஎண்ணூர்-திருச்சி-மதுரை இடையே 610 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறினார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தென்மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் பங்கேற்ற ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலை கண்காட்சி நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குனர் சுபோத் டேக்வாலி பரிசுகளை வழங்கினார்.

பின்னர் சுபோத் டேக்வாலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களை வேகமாகவும், சிக்கனமாகவும் குழாய் மூலம் கொண்டுசெல்ல எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதன்படி தமிழகத்தில் சென்னை – திருச்சி – மதுரை இடையே 526 கிலோ மீட்டர், திருச்சி – சங்ககிரி இடையே 157 கிலோ மீட்டர் மற்றும் திருச்சி காவிரி படுகை பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2005-ம் ஆண்டு முதல் குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு ஒரு சில இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அதேபோல் எண்ணூர் – திருச்சி – மதுரை இடையே குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. 610 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 அங்குல குழாய் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணி நிறைவுபெறும்போது, செங்கல்பட்டு, புதுச்சேரி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள சமையல் எரிவாயு நிலையங்களுக்கு தேவையான சமையல் எரிவாயு குழாய் மூலம் விரைவாகவும், சிக்கனமாகவும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அனுப்ப முடியும்.

திருச்சி ஆசனூரில் 64 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோலிய பொருட்களை பாதுகாக்கும் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணி 2018-ம் ஆண்டு நிறைவுபெறும். அதேபோல் மணலியை அடுத்த அமலவாயிலில் பெட்ரோலிய பொருட்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் உபபொருட்கள் தயாரிப்பதற்காக 2 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய முனையம் ரூ.600 கோடி மதிப்பில் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

பிரதம மந்திரி உஜ்வால் யோஜனா திட்டத்தின்கீழ் 38 லட்சம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் கீழ் பயனாளிகள் இருப்பதால் இந்த மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.

நரிமணம் பகுதியில் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1,713 பெட்ரோல் பங்குகள் கடந்த ஆண்டு சூரியசக்தி மூலம் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து நாடு முழுவதும் 4 ஆயிரத்து 300 பெட்ரோல் பங்குகள் சூரியசக்தி மூலம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மொத்த மின்சார உற்பத்தி 12 ஆயிரம் மெகாவாட்.இவ்வாறு அவர் கூறினார்.