துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.64 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பிடிபட்டார்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கவரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுங்க வரித்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் வந்த பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கவரித்துறையினர் அந்த பெண்ணை மறித்து அவர் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
இதில் எதுவும் சிக்காததால் பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர் உள்ளாடைக்குள் 2 கிலோ 160 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.64 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
பின்னர் சுங்கத்துறையினர், அந்த பெண் பயணியை சாகர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் ஐதராபாத்தை சேர்ந்த பர்கத் உன்னிசா (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தங்கத்தை கடத்தி கொண்டு வருவதற்காக ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.