காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு

333 0

201608230811535358_Cauvery-water-to-open-seeking-the-interim-petition-Supreme_SECVPFதமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை பெற்றிட சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு விரைவில் தாக்கல் செய்ய போவதாக குறிப்பிட்டார்.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசு வக்கீல் பி.பாலாஜி, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த ஆணையின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 50.052 டி.எம்.சி. தண்ணீரை திறந்திருக்க வேண்டும். ஆனால் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று காரணம் காட்டி கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடாமல் உள்ளது.

இதனால் தமிழகத்தில் காவிரி படுகையில் உள்ள 15 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. மேட்டூர் அணையில் தற்போது 28 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது.

நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். கர்நாடகாவுக்கு அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு 250 டி.எம்.சி. ஆகும். ஆனால் கடந்த 2015-16 பாசன ஆண்டில் நடுவர் மன்ற தீர்ப்பை மீறி கர்நாடகா 302.90 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி உள்ளது.

ஜூன் 1-ந்தேதியில் இருந்து இம்மாதம் 19-ந்தேதி வரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விடவில்லை. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், கர்நாடக அரசுக்கும் கடந்த மாதம் 30-ந்தேதி தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், கர்நாடகாவிடம் இருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.

நடப்பு பாசன ஆண்டில் கர்நாடகாவில் தேவையான அளவு மழை பெய்துள்ளது. கர்நாடக அணைகளில் கடந்த மாதம் 17-ந்தேதி வரை 69.364 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிலிகுண்டு பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி வரை 74.645 டி.எம்.சி.க்கு பதிலாக 24.593 டி.எம்.சி தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு எந்த வகையிலும் மதிக்காமல் உள்ளது என்பது தெளிவாகிறது.

கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் இருந்து இம்மாதம் வரை பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடிக்கு தேவையான அளவுக்கு மிகவும் குறைவாகத்தான் பெய்துள்ளது.

எனவே, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி இம்மாதம் 19-ந்தேதி வரை தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடியை தொடங்க உதவியாக 50.052 டி.எம்.சி. பற்றாக்குறையில் இருந்து 25 டி.எம்.சி. தண்ணீரை 10 நாட்களுக்குள் திறக்கவும், மீதமுள்ள தண்ணீரை அடுத்த மாதம் 3-ம் வாரத்துக்குள் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இம்மாதம் 20-ந்தேதியில் இருந்து தமிழகத்துக்கு தேவையான அளவு தண்ணீரை காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் உத்தரவின் அடிப்படையில் முறையாக திறந்து விட உத்தரவிட வேண்டும்.