சசிகலாபுஷ்பா எம்.பி. யின் முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த புகார் கொடுத்த இளம்பெண் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். அதன்பேரில் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். சசிகலாபுஷ்பா எம்.பி. தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி மேல்-சபையில், எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறினேன். இதன்பின்பு தான் எங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தேன். என்னை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
மேலும், சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டது. நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள பானுமதி மனு தாக்கல் செய்துள்ளார்.
சசிகலாபுஷ்பா எம்.பி., அவருடைய கணவர், மகன் ஆகியோரின் முன்ஜாமீன் மனு, பானுமதியின் ஆட்சேப மனு ஆகியவை நேற்று நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பினரின் வக்கீல்கள் ஆஜரானார்கள்.
சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் கவுரியின் முன்ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருவதால், அந்த மனுவோடு சேர்த்து இந்த மனுக்களையும் விசாரிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.