அமைச்சரவையில் ஒரு தீர்மானம் வருகிறது என்றால் அது நன்மையானதா, தீமையானதா என விவாதிக்க வேண்டும். அதைச் சண்டை என்று சொல்லிவிட முடியாது. அமைச்சரவையில் பெண்கள் போல இருந்தால் உண்மைகள் வெளியில் வராது என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு இன்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
“மட்டக்களப்பில் எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக பாரிய வேலைத் திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது. ஏனைய கட்சிகளுடன் கடும் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. வெற்றியோ, தோல்வியோ… நல்லாட்சிக்கு எந்தவித பங்கமும் வராமல் முன்னேற்றத்தை நோக்கி உழைக்க வேண்டும்.
“எனக்கும் தயாசிறி ஜெயசேகரவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அது முரண்பாடு இல்லை. கடந்த ஆட்சியில், அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே பேசுவார். மற்றவர்கள் எல்லோருமே ‘ஓம் சேர்’ என்று கூறி தலையைத் தொங்கவிடுவார்கள்.
“தற்போது அப்படி இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் சாதக, பாதகங்களை ஆராய வேண்டிய கடமையுள்ளது. அதையே நாம் செய்கிறோம். இதைச் சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
“அது சண்டை இல்லை. ஆனாலும் அமைச்சரவையில் சண்டை பிடிக்க வேண்டும். சண்டை பிடித்தால்தான் உண்மைகள் வெளியேவரும். பெண்கள் போல் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அமைச்சரவையில் நடப்பவை வெளியில் வராது.”