நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு, சர்வதேச சமூகத்தினூடாக அரசாங்கத்துடன் பேரம்பேசியிருப்பேன் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். சுமந்திரனின் இக்கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதுடன் நின்றிருப்பேன். ஏனெனில் அதுவே, சொல்லொணா போர்த்துன்பங்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள், சிங்கள தேசத்துக்கு காட்டும் மிகப்பெரிய சமாதான அடையாளம் ஆகும்.
“நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறோம். எதிர்கட்சி தலைமையையும் ஏற்கிறோம். ஆனால், வழிகாட்டல் குழுவுக்கு வரமாட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை தெற்கில் நீங்களே பேசி, முடிவு செய்து, தீர்வு பொதியை சர்வதேச சமூகம் ஊடாக எங்களுக்கு தாருங்கள்” என்றும் ஐதேக, ஸ்ரீலசு கட்சி தலைமைகளுக்கு கூறியிருப்பேன்.
ஆனால், கூட்டமைப்பின் வழிகாட்டல் வேறு. அது அவர்களது கொள்கைவழி. அவர்களுக்கு சரி என்று பட்டதை அவர்கள் செய்துள்ளார்கள்.
இன்று, பேரம் பேச எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் மேஜையில் வைத்த பிறகு என்னத்தை பேசுவது? ஆகவே தான் வழிகாட்டல் குழுவில் பேசினேன். ஏனையோர் ஒன்றும் பேசவில்லை என்று சுமந்திரன் எம்பி பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.
இதையெல்லாம் மனதில் கொண்டுதான், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ, மலையக, பிரதேச பேதங்களையெல்லாம் கடந்த “தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்” அமைக்க வேண்டும் என்ற யோசனையை நான் எப்போதோ முன் வைத்தேன். அது ஏன் நடைமுறையாகவில்லை என எல்லா தமிழ் எம்பீக்களிடமும் தனித்தனியாகதான் கேட்டுப்பார்க்க வேண்டும்.