ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிர்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலை அடுத்து கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டை புறக்கணிக்கும் எண்ணம் கூட்டு எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
திருப்தி தரும் வழியில் கட்சி செல்லாத காரணத்தால் இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
சகோதரியின் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரே தற்போது மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவரே தற்போது கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்பு வாய்ந்தவர்கள் பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார்.