வடகொரியாவில் நிலநடுக்கம் – அணுஆயுத சோதனையால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

313 0

வடகொரியாவில் இன்று, 2.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் அணுஆயுத சோதனையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்கா நில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இன்று காலை ரிக்டரில் 2.9 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா நில அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூகம்பம் முன்னர் அந்நாடு அணுஆயுத சோதனைகள் நடத்திய அதே இடத்தில் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் வடகொரியா அந்த இடத்தில் மீண்டும் அணுஆயுத சோதனையோ, ஹைட்ரஜன் குண்டு சோதனையோ நடத்தியிருக்கக்கூடும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு முந்தைய சோதனையினால் ஏற்பட்ட நிலநடுக்கத்தைவிட இந்த நிலநடுக்கம் குறைந்த அளவுடையது என கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை வடகொரியா ஆறு முறை அணுஆயுத சோதனைகள் நடத்தியுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகளின்பொழுது ரிக்டரில் 4.3 அளவிற்கு மேல் பதிவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்ட கடைசி சோதனையின் போது ரிக்டரின் 4.3 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அணுஆயுத சோதனையால் ஏற்பட்டது என தெரியவரும் பட்சத்தில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அணுஆயுத சோதனைகள் நடத்தினால் வடகொரியாவை முழுமையாக அழிக்க நேரிடும் என டிரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment