அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியது. இப்பகுதிகளில் திராட்சைப் பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவியது.
எனவே வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 8000க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. காற்று வேகமாக வீசுவதால் தீ வேகமாகப் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 2000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இதுவரை 1,75,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.