அரசுப் பணிகள் இனி ஏஜென்சிகள் மூலம் செய்யப்படும்!

2351 0

தமிழக அரசு துறையில் உள்ள சில பணிகள் இனி ஏஜென்சிகள் மூலம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுகால பலன்கள் ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழங்குவது குறித்து அலுவலர் குழு அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கையை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தேர்வு நிலை) மற்றும் 20 ஆண்டுகள் (சிறப்பு நிலை) பணி முடித்தவர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில் தற்போது வழங்கப்படும் இரண்டு ஊதிய உயர்வுகள் தொடர்ந்து அளிக்கப்படும். ஆண்டுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு என்ற நிலை தொடரும். அரசு அலுவலர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பூதியத்தில் 50 சதவீதம் கூடுதல் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் வருவாய் செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர்களின் நிலை ஆய்வு செய்யப்படும். தேவையற்ற பணியிடங்கள் இனங்கண்டறியப்படும்.

மேலும், சில பணி இடங்களில் வெளிமுகமை (ஏஜென்சிகள்) மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ முதல் கட்டமாக பணி நியமனங்களை மேற்கொள்ளவும் பரிந்துரைகளை அளிக்க பணியாளர் சீரமைப்புக் குழு நியமிக்கப்படும்.

அரசுப் பணியாளர்களுக்கு 40 வகைக்கும் மேற்பட்ட படிகள் வழங்கப்படுகின்றன. சில படிகளைத் தவிர மற்ற அனைத்துப் படிகளுக்கும் 100 சதவீதம் உயர்வு அளிக்கப்படுகிறது. திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுவதுடன் சில மாநகரங்கள், நகரங்கள் திருத்தி வகைப்படுத்தப்படுகிறது.

அதன்படி சென்னை மற்றும் அதன் 32 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கு, குறைந்தபட்ச படியாக ரூ.1,300-ம் (பழையது ரூ.500), அதிகபட்ச படியாக ரூ.8,300-ம் (பழையது ரூ.3,500) திருத்தி அமைக்கப்படுகிறது.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு மற்றும் 16 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கான படி, குறைந்தபட்சம் ரூ.700 ஆகவும், அதிகபட்சம் ரூ.4,300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதர நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ரூ.400 மற்றும் ரூ.2,200 என்றும் படி உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது.

நகர ஈட்டுப்படி வீதங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இதற்காக சில மாநகரங்கள் நிலை உயர்த்தி திருத்தப்பட்டுள்ளன.

ஓய்வூதியம் தற்போது குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 50-ம், அதிகபட்சமாக ரூ.38 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

திருத்திய ஊதிய விகிதத்தின் அடிப்படையில், ஓய்வூதியம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 (குறைந்தபட்சம் ரூ.7,850) என்றும், குடும்ப ஓய்வூதியம் ரூ.67 ஆயிரத்து 500 (குறைந்தபட்சம் ரூ.7,850) என்றும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஓய்வு பெறும்போது, சிறப்பு ஊதியம் பெறுவோருக்கான ஒட்டுமொத்த தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியமாகவும் (பழைய தொகை ரூ.1,500); ஒட்டுமொத்த தொகையாக ஒரு லட்சம் ரூபாயாகவும் (பழையதொகை ரூ.60 ஆயிரம்) நிர்ணயிக்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர், குறுஅங்கன்வாடி பணியாளர், கிராம பஞ்சாயத்து செயலர் ஆகியோருக்கும் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சமையலர், சமையல் உதவியாளர், அங்கன்வாடி உதவியாளர், ஆகியோருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியமாகவும் (பழைய தொகை ரூ.1,500); ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரமாகவும் (பழையதொகை ரூ.25 ஆயிரம்) நிர்ணயிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment