புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது?

5315 0

வக்கீல்கள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளதால் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கவில்லை என்றும், கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தங்களை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் இரு அறக்கட்டளைகளுக்கு இடையே பிரச்சினை உள்ளது. இப்போது சட்டவிரோதமாக ஒரு சொத்தை அபகரிக்க வேண்டுமென்றால் வக்கீல்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை கூலிப்படையாக அமர்த்திக்கொள்ளும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் சட்டக்கல்லூரிகளில் படிப்பதுதான். ‘லெட்டர் பேடு’ சட்டக்கல்லூரிகளில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கொடுத்து கல்லூரிகளுக்கு செல்லாமலேயே சட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றுவிடுகிறார்கள். இவர்கள் வக்கீல்களாக பதிவு செய்துகொண்டு கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

வக்கீல்கள் என்று கூறிக்கொண்டு சொத்துகளை அபகரிக்கும் நபர்களுக்கும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுக்கு தொடர்பு உள்ளதா? இதுபோன்ற கும்பல் எத்தனை உள்ளது? இவர்களை கூலிப்படையாக பயன்படுத்துவது பார் கவுன்சிலுக்கு தெரியுமா? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஏன் தயங்குகிறார்கள்? நாடு முழுவதும் சட்டக்கல்லூரிகள் 2014-ம் ஆண்டு 1,200 ஆக உயர்ந்துள்ளது. இத்தனை சட்டக்கல்லூரிகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது.

வக்கீல்கள் என்று கூறிக்கொண்டு கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு பார் கவுன்சில் ஒப்புதல் அளிக்க ஏன் தடை விதிக்கக்கூடாது? என்பதற்கு இந்திய பார் கவுன்சில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a comment