புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளிற்கு விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறை

322 0

ltte-20131104-1புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (22.08) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மேற்படி முடிவெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த விசேட மருத்துவக் கவனிப்பானது வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பொது வைத்தியசாலைகளிலும் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஆதார வைத்தியசாலைகளிலும் இடம்பெறவுள்ளது.

இச் சேவையானது விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நடைமுறையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்குத் தேவையான அடிப்படையான மற்றும் விசேடமான பரிசோதனைகளும் ஆய்வுகளும் இடம்பெறவுள்ளது. அத்துடன் அவர்களின் நீண்டகால சுகநலம் தொடர்பாக தொடர் அவதானிப்பும் பராமரிப்பும் வழங்கப்படவுள்ளது.

மேற்படி விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறைகள் தொடங்கும் திகதியும் அந்த நடவடிக்கைகள் இடம்பெறும் வைத்தியசாலைகள் பற்றிய விபரமும் விரைவில் அறிவிக்கப்படுமென அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக தகவல் பெற விரும்புவர்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டக்கொள்ளப்பட்டுள்ளது.