இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மிடமுள்ள கைதிகளை படுகொலை செய்தார்கள் என நிரூபித்து அதன்மூலம் அவர்களும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் இத்தகைய சதிவேலையை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்தே குறித்த கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சுலக்சன் உட்பட தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் வழக்குகளை வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்ற முற்படுவதில் பாரிய சதித் திட்டமொன்று இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதனாலேயே ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்களப் பிரதேசங்களுக்கு வழக்குகளை மாற்ற முனைந்துள்ளதாகவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.
தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும் என்று கூறும் அவர், அவ்வாறு சாட்சியளிக்கப்படும் பட்சத்தில் தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக் கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுர நீதிமன்றிற்கு மாற்றியமைக்கான காரணம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடையும் தறுவாயில், முன்னரே கைது செய்து வைத்திருந்த சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று நிரூபிப்பதற்காகவே குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த அரசியல் கைதிகள் மீதான இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு தடுப்பில் இருக்கும் வேறு சில கைதிகளை அரச சாட்சிகளாக மாற்றி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் அரச படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் கூற முடியும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே தடுப்பில் இருக்கும் தமிழ் கைதிகளை அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.