தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று இரவு முதல் பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தன.
இந்த திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களில் இருந்து நேற்று இரவு புறப்படவிருத்த பல தொடரூந்து சேவைகள் ரத்தாகின.
இதன் காரணமாக தொடரூந்து பயணிகள் நிர்கதியானதுடன், அமைதியற்றவகையிலும் செயற்பட்டனர்.
இதனையடுத்து பயணிகளை கட்டுப்படுத்த காவற்துறையினர் ஈடுப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், நிலைமைகளை கட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.