மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது என்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அதன் அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தகால அரசியலின் போது கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் அரசியற் கைதிகள் பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவர்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமான அரசியற் சூழல் இன்றில்லை.
அந்த அரசியல் சூழலில் செயற்பட்ட 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்து பொதுவாழ்வில் இணைத்துள்ளதைப் போல, இந்த அரசியற் கைதிகளும் பொது மன்னிப்பு மூலமாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இந்தக் கைதிகளின் வழக்கு விசாரணை, விடுதலைச் சாத்தியங்கள் போன்றன பற்றித் தெரியாத நிலையில் குடும்பத்தினர் மிகுந்த அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இது தமிழ்ச் சமூகத்தின் அரசியற் போக்கினையும் உளவியலையும் ஆழமாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையிலே வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியைத் தழுவிய நிர்வாக முடக்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.