சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்து அவற்றில் பொது மக்களையும் உள்வாங்கும் வகையிலான நடவடிக்கைகள் (கானொளி)

487 0

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான  விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

இலங்கை சுற்றுலாச்சபை மற்றும் அவுஸ்திரேலியன் உதவி நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த மாநாடு மட்டக்களப்பில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலாத்துறைச் சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் எஸ்.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த, மாநாட்டில் உல்லாசப் பயணத்துறையில் கவனம் செலுத்திவரும் உல்லாச விடுதிகளின் முதலீட்டாளர்கள், அரச உள்ளூராட்சி நிருவாக அதிகாரிகள், துறைசார்ந்த விற்பன்னர்கள், ஆய்வாளர்கள், அவுஸ்திரேலியன் உதவி நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுரேந்திரன் உட்பட கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அமைப்புகள், திணைக்களங்களின் தவைர்கள், பிரதேச சபையின் தலைவர்கள், சுற்றுலா விடுதி சங்கங்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி தொடர்பில் விரிவான கருத்துரைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றினை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் வருடாந்தம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேல், கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் நிலையில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யவும் அவற்றிற்காக பொதுமக்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் சுற்றுலாத்துறைக்கு இணைவாகவுள்ள துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment