பரபரப்பை ஏற்படுத்திய 14 வயதுச் சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”சிறுமி ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜை தல்வார் தம்பதியினர்தான் கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை. இதனால் சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து அவர்களை விடுதலை செய்கிறோம்” என்று தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார். இவர்களது ஜல்வாயு விஹார் வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த நொய்டா போலீஸ், முறையாக விசாரிக்காமல் அவரது வீட்டு வேலைக்காரனான ஹேமராஜ் எனும் நேபாளிதான் கொலையாளி எனவும், அவரை தேடி வருவதாகவும் அவசரக் கோலத்தில் அறிவித்தது. மறுநாள், தல்வார் வீட்டின் மேல் மாடிக் கதவை திறந்து பார்த்தபோது அங்கு ஹேமராஜ் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இந்த சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால், உ.பி. போலீசாரின் அடுத்த சந்தேகம் அவர் மீது திரும்பியது. இவருடன் பணியாற்றும் மற்றொரு மருத்துவரும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான அனிதா துரானிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மகள் ஆருஷி எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார். அதன் பிறகு ஜூன் 1, 2008-ல் சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா, பக்கத்து வீட்டு வேலைக்காரன் ராஜ்குமார் மற்றும் இவரது நண்பன் விஜய் மண்டல் ஆகியோர் ஜூன் 13-ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தல்வார் தம்பதிகளுக்கும் இந்த சோதனை 2 முறை நடத்தப்பட்டது. இதிலும் சிபிஐக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து காஸியாபாத் சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் தல்வாரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்த விசாரணையின் முடிவில் காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், தல்வார் தம்பதிக்கு நவம்பர் 25, 2013-ல் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்து வந்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”சிறுமி ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜை தல்வார் தம்பதியினர்தான் கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை. இதனால் சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து அவர்களை விடுதலை செய்கிறோம்” என்று தீர்ப்பளித்துள்ளது.