ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுப்பு

362 0

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தொடங்கிய அரசியல் கட்சியை பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினான். தனது பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தை மில்லி முஸ்லீம் லீக் (எம்எம்எல்) என அரசியல் கட்சியாக்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தின் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருப்பதால், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யக்கூடாது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது. இதன் அடிப்படையில், சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பான வாதம் நடைபெற்றபோது, மில்லி முஸ்லிம் லீக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, பயங்கரவாத இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை உள்துறை அமைச்சகத்திடம் தெளிவுபடுத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். வீட்டுக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், வீட்டுக் காவலை நீட்டித்தது தொடர்பான போதுமான ஆதாரங்களை அரசு வழங்காவிட்டால் விடுதலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment