கட்டலோனியா தனிநாடு குறித்து முடிவெடுக்க 5 நாள் கெடு விதித்த ஸ்பெயின் பிரதமர்

6986 7

ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

நேற்று கட்டலோனியா பகுதி பாராளுமன்றத்தில் பேசிய பியுங்டிமாண்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. மாட்ரிட் உடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனிநாடாக பிரிவது குறித்து பரிசீலனை செய்து ஐந்து நாட்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியுள்ளார். ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பேசிய அவர், “நேற்று கட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஸ்பெயின் மக்களுக்கு பியுங்டிமாண்ட் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது. இது தொடர்பாக அவர் இறுதியாக யோசித்து நல்ல முடிவை எடுக்க அவருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. வருகிற 19-ம் தேதி காலை 10 மணிக்குள் அவர் தனது முடிவை தெரிவிக்க வேண்டும்”, என ஸ்பெயின் பிரதமர் மரியானோ பேசினார்.

ஸ்பெயினுடன் கட்டலோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கட்டலோனிய நகரமான பார்சிலோனாவில் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment