தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் மெகா ஊழலை கண்டித்தும், மக்கள் விரோத மோடி அரசின் ஊழல்களை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டத்தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், வடசென்னை மாவட்டத்தலைவர் எம்.எஸ்.திரவியம், சென்னை மேற்கு மாவட்டத்தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.சி.பிரிவு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திருநாவுக்கரசர் பேசியதாவது:-
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு தொழில் தொடங்கி, அமித்ஷா பா.ஜனதா தலைவராக பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து 16 ஆயிரம் சதவீதம் உயர்ந்து 80 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. எந்த தொழிலும் செய்யாத நிறுவனத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? எதற்காக கொடுக்கப்பட்டது? என்று தெரியவில்லை.
இதுபோன்று பா.ஜனதா மந்திரிகள், பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மீது ஊழல்கள் மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே, பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் ரூ.16 லட்சம் கோடிகளுக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை கொண்டு, ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் பெரும் கோடீஸ்வரர்களின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது, நாடு முழுவதும் 80 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு தந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்களை 10 நாட்களில் தள்ளுபடி செய்வதாக தற்போது ராகுல்காந்தி வாக்குறுதி தந்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். தினமும் 10 பேர் சாகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை. மருத்துவ குழுவை அனுப்பவில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்களின் வாக்குகளை பெறுவதற்காக வந்த மந்திரிகளில் ஒருவர் கூட தமிழகத்தை பார்வையிட வராதது ஏன்?.
தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசுடன் கைகோர்த்து கொண்டு தமிழக மக்களை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கான விலையை தரவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளது. அப்போது, மோடி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்பட்டு, ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.