பரோல் முடிவடைந்ததையடுத்து சசிகலா சென்னையில் இருந்து இன்று பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள அவருடைய மனைவியும், அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளருமான சசிகலா தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியுள்ளார்.
தினமும் அவர் தனது கணவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து வந்தார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று பகல் 12 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு சசிகலா வந்தார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் உறவினர்கள் பலர் வந்தனர்.
முன்னதாக சசிகலாவை தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்றனர். ஆஸ்பத்திரி வாசலில் தொண்டர்கள் 3 பேரின் குழந்தைகளுக்கு சசிகலா பெயர் சூட்டினார். கட்சி தொண்டர் ஒருவர் ‘நெப்போலியன் வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தை சசிகலாவிற்கு வழங்கினார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ம.நடராஜனிடம், நாளை (இன்று) பெங்களூரு புறப்பட்டு செல்வதாகவும், முடிந்தால் மீண்டும் வந்து சந்திப்பதாகவும் சசிகலா கூறியுள்ளார். மாலை 3.30 மணிக்கு சசிகலா வீட்டுக்கு திரும்பி சென்றார்.
பரோல் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைசாலைக்கு சசிகலா புறப்பட்டு செல்கிறார். முன்னதாக இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கணவர் நடராஜனை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு பெங்களூருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப்பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவருடைய உறவினர்களும் இன்று பெங்களூரு சென்று சசிகலாவை விட்டு வர செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.