அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது: மு.க.ஸ்டாலின்

956 29

அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஊதியம் வழங்கவில்லை என்று தொடர்ந்து போராட்டம் நடந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?

பதில்:-அங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குதிரை பேர ஆட்சி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூட செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி:-டெங்கு பிரச்சினையில் மாநில அரசு எந்தக் கோரிக்கையும் வைக்காததால் மத்திய அரசு உதவ முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையிலும் டெங்கு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இந்த அரசு மறுக்கிறதே?

பதில்:-டெங்கு உள்பட பல பிரச்சினைகளில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கேட்டும், எந்தவித பயனுமில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

அதேபோல, இப்போதும் பல பிரச்சினைகளில் வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எதற்கும் பதில் இல்லை. டெங்கு பிரச்சினையில் மாநில அரசின் அலட்சியம் குறித்து இன்றைக்கு பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. எனவே, முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான் உண்மைகள் வெளி வரும்.

கேள்வி:-அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:-அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பா.ஜ.க.வுக்கும் வந்துவிட்டது. அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்தியதற்காக தி.மு.க. சார்பில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. ஆட்சி எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி:-குட்கா விவகாரம் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் இதுவரை இடம்பெறாமல் உள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புள்ளதா?

பதில்:-அதனால் தான் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூலமாக நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். அதேபோல, அமைச்சர், டி.ஜி.பி.க்கள் ஆகிய 3 பேரின் பெயர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வழக்கும் தொடங்க உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் உரிய நியாயம் கிடைக்கும்.

கேள்வி:-தி.மு.க.வை ஊழல் கட்சி என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்து இருக்கிறாரே?

பதில்:-எதற்கும் பயனற்ற, உதவாத வகையில் அவர் அளித்து வரும் பேட்டிகளை எல்லாம் தொடர்ந்து நானும் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். நான் கேட்கும் ஒரே கேள்வி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் வினியோகம் செய்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்று, அது விசாரணையில் இருக்கிறது. அதேபோல, குட்கா விற்பனையில் ஒரு அமைச்சரும், இரு காவல்துறை உயரதிகாரிகளும் மாமூல் வாங்கியதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையில் கிடைத்துள்ளன. அந்த வழக்கும் நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த குதிரை பேர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அவர்கள் அளித்துவிட்டு, அதன்பிறகு கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.

கேள்வி:-தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளபோது, அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் விலையை 12 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறதே?

பதில்:-படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவோம், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பதில் இருந்து, எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கேள்வி:-டெங்கு பிரச்சினையில் அரசு செயலிழந்து இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உங்களுடைய செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?

பதில்:-எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கும், இந்த அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கு இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, டெங்கு பாதிப்புகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a comment