ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் இருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி. நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். அ.தி.மு.க. பிரமுகர்களான இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரை கழக சட்ட விதிகளின்படி தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு விசாரணையில் உள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது ஜெயலலிதா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு 913 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அ.தி.மு.க. என்ற தொண்டர்களின் இயக்கம் தொண்டர்களுக்குத் தான் சொந்தம்.
எனவே, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் அதிகாரப்பூர்வ நிர்வாகி ஒருவரை ஐகோர்ட்டு நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.