400,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரியின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2017ம் ஆண்டு சிறுபோகத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட அரிசி உற்பத்தி 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை சந்தையில் அரிசி தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏதுவான வகையில் 500,000 மெட்ரிக் தொன் அரிசியை கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தின் (சதோச) மூலம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, 400,000 மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வது தொடர்பிலேயே இந்த விசேட குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.