சர்ச்சைக்குரிய பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனமோ அல்லது அதன் ஊழியர்களோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதியுதவி வழங்கவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சமுகமளித்து விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதன்பேரில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று (11) ஆஜராகி விளக்கமளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி அங்கு விளக்கமளிக்கும்போதே மலிக் சமரவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த பேச்சுவார்த்தை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தேவையான நிதியொதுக்கீடு தொடர்பானதாகவே இருந்தது என்றும், பிணைமுறி வழங்கல் தொடர்பானதாக அமைந்திருக்கவில்லை என்றும் அமைச்சர்கள் இருவரும் தமது விளக்கத்தின்போது தெரிவித்திருந்தனர்.