“சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது, ஆனால் அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே இவர்களின் விடுதலையில் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் சிறைக்கைதிகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடருமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் அமைச்சரவையில் கவனத்திற்கு கொண்டுவந்தாரா? என்பது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பின்வருமாறு பதிலளித்தார்.
“15 வருட காலத்திற்கு மேலாக தமிழ்க்கைதிகள் வெறுமனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இவர்களின் வாழ்க்கையின் அரைவாசி காலப்பகுதி வீண்விரயமாக்கப்படுகின்றது. இவர்களை விடுவிக்கவேண்டுமென்று நானும் பலமுறை தெரிவித்துள்ளேன். குற்றமற்றவர்களை தடுத்துவைத்தல் நியாயமற்றதாகும். வழக்கு தொடரப்பட்டு விடுதலையானவர்களில் குறிப்பாக ஜே.வி.பி. வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு வழக்கின் மூலம் விடுதலையானவர்கள் பலர் கடந்தகாலங்களில் ஜே.வி.பி.வன்முறைகளில் பங்குகொண்டதை நாம் காணக்கூடியதாக இருந்தது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல் இல்லை. புனர்வாழ்வளிக்கப்பட்ட மகளீர் தலைவி தமிழினி எழுதிய நூலினை படித்தால் பலவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.