ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள், அந்த சமூகத்தின் சொத்துக்கள் எனவே அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
முதியவர்கள் தொடர்பில் விசேட திட்டங்கைள நடைமுறைப்படுத்த வேண்டும் . அப்போதே எங்கள் மத்தியில் வாழ்கின்ற முதியவர்களின் நலன்களை பேணி பாதுகாக்க முடியும். எங்களுடைய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இவ்வாறு வறுமையில் வாழ்கின்ற பிள்ளைகளால் தங்களின் முதிய பெற்றோர்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர பல முதியவர்கள் தாங்கள் தங்களின் வறிய பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க கூடாது என்ற மனநிலையிலும் காணப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல முதியவர்கள் கைவிட்டப்பட்ட நிலையில் உள்ளனர்
எனவேதான் முதியவர்கள் தொடர்பில் அரசு விசேட திட்டங்கைள அறிமுகப்படுத்தி அவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் அதற்கு இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 8100 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்களுக்கு ஜம்பதாயிரம், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் வாழ்வாதாரம் வழங்கிவிட்டால் இவர்களது வாழ்க்கையில் நிரந்தர முன்னேற்றம் ஏற்பட்டுவிடும என்று அர்த்தமல்ல, மாறாக அரசினால் இவர்களுக்கு மாதாந்தம் தொடர்ச்சியான உதவித்திட்டங்கள் வழங்கப்படுவது அவசியம். அவ்வாறே முதியவர்களின் விடயத்திலும் விசேட திட்டங்கள் அவசியமாகின்றன. ஏனத் தெரிவித்த அவர்
அரசின் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவித்திட்டங்களில் கூட இரண்டு அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது முதியவர்களே. இவர்களே எங்கள் சமூகத்தில் அதிகமாக இரண்டு அங்கத்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. கடந்த காலத்தில் மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் அரசு அதிகளவுக்கு உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை அளித்து விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் சென்றது. ஆனால் இன்று கடந்த காலம் போன்று அந்தச் சுமை அரசுக்கு இல்லை எனவேதான் பெண் தலைமைத்துவ மற்றும் முதியவர்கள் தொடர்பில் அரசு விசேட திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.
எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்பது சிறந்த தலைமைத்துவத்தில்தான் இருக்கிறது. ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற நல்ல தலைமைத்துவமே அந்த சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் எனத் தெரிவித்த அவர் முதியவர்கள் எங்களுடைய சமூகத்தின் முதுசங்கள், ஒரு சமூகத்தின் சொத்துக்கள், அவர்களுடைய அனுபவங்களும், அறிவும் நல்ல ஆலோசனைகளாக சமூகத்திற்கு கிடைக்க வேண்டும் எனவே நாம் எங்கள் சமூகத்தில் இருக்கின்ற முதியவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் எங்களுக்கு ஆயிரம் நெருக்கடிகள் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையும் கடந்து எங்கள் முதியவர்களை மரியாதைக்குரியவர்களாக பேணுவோம் அவர்களின் நலன்களை பாதுகாப்போம். எனவும் குறிப்பிட்டார்
ஊற்றுப்புலம் மூத்த பிரஜைகள் சங்கத் தலைவர் நா. சின்னையா தலைமையில் இடமபெற்ற நிகழ்வில் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ், கிராம அலுவலர் குணசிங்கம, கரைச்சி பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆரணி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எமில்ராஜ் மூத்த பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.