ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

302 0
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  அரசியல் கைதிகளுக்காகவும்
வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.10.2017) நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமது முழு ஆதரவையும் வழங்குவதாக  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன்  தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கிவரும் முப்பது கிளை நிலையங்கள் மற்றும் கண்டாவளையில் அமைந்துள்ள வெல்ல உற்பத்தி நிலையம் கோணாவிலில் அமைந்துள்ள போத்தல் கள் உற்பத்தி நிலையம் ஏ9 வீதி கரடிப்போக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைக் காரியாலயம் என்பன முற்றாக
மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சங்க தீர்மானத்தின்படி இந்த அறிவிப்பை தாம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள்
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வரும் அதேநேரம் உடல் ரீதியாகவும்ரூபவ் உள ரீதியாகவும் தினம் தினம் பாதிக்கப்படுவதனை நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனால், அவர்கள் மட்டும் துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் சார்ந்துள்ள பெற்றோர்,   மனைவி, பிள்ளைகள், உறவுகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறித்த அரசியல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதன்
பயனாகவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு நாம் எமது ஆதரவினை வழங்குகின்றோம்.
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவை பணிகளை மேற்கொண்டு வரும் அதேவேளை தமிழ் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து வருகின்றது. தொடர்ந்தும் தமிழ் சமூகத்தின் குரலாக, கிளிநொச்சி பனை தென்னை வள
அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் செயற்படும் என சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன்  மேலும் தெரிவித்தார்.

Leave a comment