இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என, வௌியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு கல்வி அமைச்சர் தெரிவிக்கவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் ஊடகமொன்று அமைச்சுக்கு அழைப்பினை ஏற்படுத்திய வேளை, கல்வியமைச்சின் செயலாளர் எனக் கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த தகவல் தொடர்பில், கல்வி இராஜாங்க அமைச்சரிடம் குறித்த ஊடகம் வினவிய போது, அது போன்ற விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்றே அவரும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தற்போது பிரதமருடன் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ளமையால் அவரை தொடர்புகொள்ள முடியாதுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி அமைச்சர் இது போன்ற கருத்தொன்றை வௌியிட்டுள்ளார் எனவும், இது சிறந்த தீர்மானமல்ல என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.