நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகள் இடைக்கிடையில் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய இரு விமானங்களை மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானித்துள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.