சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் காவல் நிலையங்கள் – மட்டக்களப்பில் அதிசயம்!

312 0

IMG_0276மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல் நிலையங்களை அமைப்பற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தின்போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைப்பாளர்களான அமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா,பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் இந்த மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள்,திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

IMG_0264

இங்கு மயிலந்தனை மற்றும் மாதவனை பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் அத்துமீறல்கள் தொடர்பில் அரசியல்வாதிகளினால் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.மேய்ச்சல் தரைகள் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களின் அத்துமீறல் செய்யப்படுவதன் காரணமாக அப்பகுதியில் இனமோதல்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் அவற்றினை உடடினடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு தான் சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடியதாகவும் அக்காணிகளில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கையெடுக்குமாறு அதிகாரசபையினர் பணித்ததாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.எனினும் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் ஆதரவு குறைவாகவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

IMG_0261

குறித்த பகுதி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வன இலாகாவுக்கும் உரியது எனவும் அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் அரசியல்வாதிகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.தமிழர்கள் சிறிய கம்பினை வெட்டிச்சென்றாலும் கைதுசெய்யும் பொலிஸார் இவ்வாறான பாரிய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முன்வராமை பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அதிகளவானோர் குறித்த பகுதிக்கு விலையுயர்ந்த வாகனங்களில் வரும் தனவந்தர்கள் பாரியளவில் காடுகளை அழித்து இந்த காணி சுவீகரிப்பில் ஈடுபடுவதாக இங்கு கருத்து தெரிவித்த செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் தெரிவத்தார்.கடந்த காலத்தில் சிறியளவில் பிடிக்கப்பட்ட காணிகள் இன்று பாரியளபில் பிடிக்கப்படுவதாகவும் அதிகாரிகளைக்கண்டதும் அவர்கள் காடுகளுக்குள் சென்றுமறைவதாகவும் தெரிவித்தார்.இதன்போது நிலஅளவீட்டு திணைக்களத்தினால் வரையப்பட்ட வரைபடமும் இணைத்தலைவர்களுக்கு காட்டப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குறித்த பகுதிகளில் காவல் நிலையங்களை அமைத்து சட்ட விரோத குடியேற்றத்தினை தடுப்பது எனவும் அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்ற வாசிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கையெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. IMG_0302