கைது செய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவருக்கு விளக்கமறியல்

324 0

கைது செய்யப்பட்ட லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல முனசிங்ஹ நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக கணக்குமாற்றப்பட்ட 1.1 மில்லியன் டொலர் பணம், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த கணக்கில் இருந்து பணத்தை மீளப்பெற முற்பட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாய்லாந்து வங்கியின் கணினி அமைப்பில் அத்துமீறி பிரவேசித்து அதன்பணத்தொகை இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படியே, லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, தமது நிறுவன தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் குறித்து நிறுவனத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment