அமெரிக்காவின் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு

322 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் லப்போக் நகரில் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் நிலையமும் உள்ளது. இங்குள்ள போலீசார் பல்கலைக்கழக மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவதுடன், அவ்வப்போது மாணவர்களின் அறைகளிலும் சோதனை செய்வதுண்டு.

அவ்வகையில், மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களின் அறைகளில் போலீசார் திங்கட்கிழமை மாலை சோதனையிட்டுள்ளனர். அப்போது ஒரு அறையில் போதை மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் சாதனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக ஒரு மாணவனை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில, அந்த மாணவன் திடீரென துப்பாக்கியை எடுத்து போலீஸ்காரை நோக்கி சுட்டுள்ளான். இதில் அந்த போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அந்த மாணவன் துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டான். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் பற்றி அறிந்ததும் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அத்துடன், யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. தப்பி ஓடிய மாணவனை தேடி வருகின்றனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a comment