சென்னையில் கழிவுப் பொருட்களை தேக்கி வைத்த 2000 கடைகளுக்கு நோட்டீஸ்

481 0

சென்னையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் பழைய பொருட்களை தேக்கி வைத்திருந்த 2000 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 11 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழக அரசின் சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கடைக்காரர்கள் கழிவுப் பொருட்களை தேக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவ்வாறு கொசு உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்ட 2000 கடைக்காரர்களுக்கு தொற்றுநோய் தடுப்பு இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாகும் டயர் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை 2 நாளில் அகற்ற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பழைய பொருட்களை அகற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment