காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக கடமை நிமித்தம் சிவில் உடையில் செல்லும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தலைமைப்பீடத்துக்குச் செல்வதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் செல்வதற்கு இராணுவத்தினர் திட்டமிட்டு, மறுத்து வருவதாக கூறப்படுகிறது. ‘உயர்பாதுகாப்பு வலயத்தினை அண்மித்த ஒட்டகப்புலம், காங்கேசன்துறை, பலாலி வடக்கு அன்டனிபுரம், காங்கேசன்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு பயணிக்கும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பன பதிவு செய்யப்பட்ட பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றன. இந் நிலையில் நெல்லியடி, அச்சுவேலி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை போன்ற பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களான இளவாலை, தெல்லிப்பழைக்குச் செல்வதற்கு உயர்பாதுகாப்பு வலயம் ஊடாகவே இதுவரை பயணித்து வந்தனர்.
ஆரம்பத்தில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் பயணிக்கும் போது இராணுவ சோதனை சாவடியில் பொலிஸ் அடையாள அட்டையினை காண்பித்து பதிவுகளை மேற்கொண்ட பின்னர் பயணத்தினை மேற்கொள்ள இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது, பொலிஸ் சீருடை அணிந்தால் மட்டுமே உயர்பாதுகாப்பு வலயம் ஊடாக பயணிக்க முடியும். சிவில் உடையில் பயணிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் மாற்று வழியூடாக செல்லுமாறு கூறப்படுகிறது.
குறித்த பகுதிகளுக்கு இலகுவாக பயணிக்கும் நிலை மாறி தற்போது நீண்டதூரம் பயணம் செய்தே ஏனைய கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.