இலங்கை விமானப்படைக்கு புதிதாக நவீனரக விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும் புதிய விமானங்களை வாங்க விமானப்படை விசேட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படைக்கு புதிதாக 18 விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விமானப்படை ஊடகப்பேச்சாளர் கிஹான் செனவிரத்னவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை விமானப்படை வருடாந்தம் தமது விமானங்கள் தொடர்பிலான அறிக்கையினை பாதுகாப்பு அமைச்சிற்கு சமர்ப்பிப்பது வழமையான ஒன்றாகும். பழைய விமானங்களை திருத்தவும் தேவைப்படும் பட்சத்தில் புதிய விமானங்களை வாங்கவும் நாம் எமது தரப்பில் அறிக்கை வழங்குவோம். எனினும் அவசரமாக 18 விமானங்களை கொள்வனவு செய்யவேண்டும் என விமானப்படை ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போது இல்லை. பழுதடைந்துள்ள சில விமானங்களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதேபோல் பழைய விமானங்களை புதுப்பிக்க வேண்டும். அதற்கான தேவைகள் உள்ளன.
அமைச்சரவையில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் உறுதியாக எம்மால் இந்த விடயத்தில் எதனையும் குறிப்பிட முடியாது. அதேபோல் 18 புதிய விமானங்களை கொள்வனவு செய்ய அரசங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக இதுவரையில் எமக்கு எந்த தகவல்களையும் அனுப்பவில்லை. தவறான கருத்துக்களை ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது.
அதேபோல் குறிப்பிட்ட சில நாடுகளின் பெயர்களை சுட்டிக்காட்டி அந்த நாடுகளில் இருந்து விமானங்களை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் இன்னும் உறுதியான தீர்மானம் இல்லை. எமக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கேள்வி கோரலுக்கு விடப்பட்டு அதன் மூலமாகவே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையில் கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்வ
தற்கான விமானங்கள் தற்போது இலங்கை விமானப்படைக்குத் தேவைப்படுகிறதாகவும் அதற்காகவே புதிய ரக 18 விமானங்களை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் மற்றும் இலங்கையின் ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. தற்போது கேள்விப்பத்திரங்களுக்கு அமைய சில நாடுகள்விமானங்களை வழங்க முன்வந்துள்ளதா கவும் தெரியவருகின்றது.