சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ ஹசின் லாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
உலகளவில் ஒரு நாட்டின் ஜனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் 6-ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களில் சீனர்கள் 74.2 சதவீதமாகவும், மலாயர் 13.4 சதவீதமாகவும், இந்தியர் 9.2 சதவீதமாகவும் உள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வேன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ ஹசின் லாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீனர் அல்லாத சிங்கப்பூரில் வாழும் சிறுபான்மை மக்களில் இருந்து அதிபரை அவ்வப்போது தேர்வு செய்வது குறித்த கேள்வி பிரதமர் லீ-யிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த லீ, “சிங்கப்பூரில் வாழும் சிறுபான்மை மக்களில் இருந்து அதிபரை கொண்டு வருவதற்கான சட்டத் திருத்தத்திற்கு பெரும்பான்மையாக இருக்கும் சீன சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
சீனாவிற்கு அடுத்த நிலையில் மலாய்களும், இந்தியர்களும் சிங்கப்பூரில் அதிக அளவில் உள்ளதால் அவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அதிபராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.