அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கக்கூடியதொரு புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம் என ஜே.வி.பி பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயத்தில் தமது கட்சி தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் மக்களின் உரிமைகளை சிறிதளவேனும் வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இருப்பினும் அதனை சிதரடிக்கும் நோக்கில் வடக்கிலும், தெற்கிலும் சில இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
இதனை தவிர்த்து கிடைத்துள்ள சந்தர்ப்பதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பல வருடங்களாக தொடர்ந்து இன்றும் கூட பலவித இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே அதனை கருத்திற்கொண்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.