கிளிநொச்சி சிறுவர் இல்லம் ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளான ஜந்து சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவார் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த ஜந்து சிறுவர்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று குறித்த சிறுவர்களில் ஒருவர் தமது தந்தையுடன் சென்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு ஏனைய சிறுவர்களை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்றமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவர் இல்லத்தில் யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட சிறுவர்கள் உள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.